Thursday 30 October 2014 | By: Menaga Sathia

மிளகாய் துவையல் / Milagai Thuvaiyal | Side dish for Idli & Dosa

ஏதாவது வித்தியாசமான  சட்னி சொல்லுங்கள் என கீதாவிடம் கேட்டபோது அவங்க பெரியம்மாவின் இந்த சட்னி குறிப்பினை சொன்னாங்க.சூப்பரா இருந்தது.நன்றி கீதா!!

தே.பொருட்கள்

காய்ந்த மிளகாய் - 20
சின்ன வெங்காயம் - 25
புளி - 1 சிறிய நெல்லிக்காயளவு
உப்பு+நல்லெண்ணெய் = தேவைக்கு

தாளிக்க

கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள்- 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை

*கடாயில் எண்ணெய் விட்டு மிளகாயை கறுகாமல் வறுத்தெடுக்கவும்.
 *பின் வெங்காயத்தை வதக்கவும்.
 *மிக்ஸியில் மிளகாயுடன் உப்பு சேர்த்து அரைக்கவும்.இப்படி செய்வதால் மிளகாய் சீக்கிரம் அரைபடும்.
 *பின் அதனுடன் வெங்காயம்+புளி சேர்த்து கொரகொரப்பாக நீர் சேர்க்காமல் அரைக்கவும்.
 *தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து அரைத்த சட்னியில் சேர்க்கவும்.

*இட்லி,தோசையுடன் சாப்பிட செம ருசி!! 1 வாரம் வரை கெடாமல் இருக்கும்.

பி.கு

*இதே போல் சின்ன வெங்காயத்திற்கு பதில் பூண்டு சேர்த்து அரைக்கலாம்.

*இந்த சட்னிக்கு நல்லெண்ணெய் மட்டுமே பயன்படுத்தவும்.

Monday 27 October 2014 | By: Menaga Sathia

முள்ளங்கி சாம்பார் /Mullangi (Radish) Sambhar

*முள்ளங்கியினை மட்டும் எப்போழுதும் மற்ற காய்களுடன் சேர்த்து சமைக்காமல் தனியாக சமைக்க வேண்டும்.

*முள்ளங்கியை சாம்பார் அல்லது குழம்பு செய்யும் போது எப்போழுதும் எண்ணெயில் வதக்கி சமைக்கவேண்டும்.இல்லையெனில் முள்ளங்கியின் பச்சை வாசனை அடிக்கும்.

*அதே போல் எப்பொழுதும் இதற்கு புளியின் அளவை குறைவாக சேர்க்கவேண்டும்.

தே.பொருட்கள்

துவரம்பருப்பு - 1/3 கப்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
முள்ளங்கி -1 நடுத்தர  அளவு
நறுக்கிய வெங்காயம் -1
நறுக்கிய தக்காளி -1 சிறியது
கீறிய பச்சை மிளகாய் -2
சாம்பார் பொடி - 1 1/2 டீஸ்பூன்
புளிகரைசல் -1/4 கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு+எண்ணெய் = தாளிக்க

தாளிக்க

வடகம் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
பெருங்காயத்தூள் -1/2 டீஸ்பூன்

செய்முறை

*துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும்.முள்ளங்கியை தோல்சீவி வட்டமாக மெலிதாக நறுக்கவும்.


*பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம்+பச்சை மிளகாய்+தக்காளி+நறுக்கிய முள்ளங்கி என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

*பின் வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
*காய் வெந்ததும் சாம்பார் பொடி+புளிகரைசல் சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
*கடைசியாக தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து கொத்தமல்லிதழை தூவி இறக்கவும்.
பி.கு

*சிகப்பு முள்ளங்கியாக இருந்தால் தோலுடன் சமைக்கலாம்,ஆனால் அந்த சாம்பார் வெள்ளை முள்ளங்கி சாம்பார் போல சுவையாக இருக்காது.
Saturday 11 October 2014 | By: Menaga Sathia

சாத்தூர் சேவ் / சாத்தூர் காரா சேவ் / SATTUR SEV | SATTUR KARA SEV | DIWALI RECIPES

 சென்னை - கன்னியாகுமாரி போகும் வழியில் சாத்தூர் ஊரில் சேவ் மிக பிரபலமானது.

இதில் சேர்க்கபடும் முக்கிய பொருளே பூண்டு மற்றும் மிளகாய்த்தூள் தான்.இதில் வெண்ணெய் அல்லது எண்ணெய் ஊற்றி பிசைய தேவையில்லை.விரும்பினால் சேர்க்கலாம்.

இந்த சேவ் சுவையாக இருக்க காரணம் அந்த ஊரின் தண்ணீரும் ஒரு காரணம்.


தே.பொருட்கள்

கடலை மாவு -  1/2 கப்
அரிசி மாவு -1/2 கப்
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்
பூண்டுப்பல் -5
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - 3/4 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க

செய்முறை

*பூண்டு+பெருங்காயத்தூள் இவற்றினை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
 *பாத்திரத்தில் மிளகாய்த்தூள்+உப்பு இவற்றினை சிறிது நீரில் கரைக்கவும்.
 *பின் கடலை மாவு+அரிசி மாவு+சீரகம்+அரைத்த பூண்டு விழுது சேர்க்கவும்.
 *தேவையான நீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.
 *எண்ணெய் காயவைத்து சேவ் அச்சியி அல்லது தேன் குழல் அச்சியில் போட்டு பிழியவும்.
*பிழியும் போது 1 சுற்று மட்டுமே சுற்றி பிழியவும். அதிக சுற்று சுற்றினால் சேவ் வேகாது மேலும் தனிதனியாக பிரிக்க முடியாது.

*பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

*ஆறியதும் காற்றுப் புகாத டப்பாவில் வைத்து பயன்படுத்தவும்.

இண்டஸ்லேடீஸ் கிட்ஸ் லஞ்ச் பாக்ஸ் ரெசிபி இ-புக் /INDUSLADIES KIDS LUNCHBOX RECIPES E - BOOK


ப்ரெண்ட்ஸ் என்னுடைய 2 குறிப்புகள் சோயா பிரியாணி மற்றும் 3 வண்ண குடமிளகாய் பரோட்டா இண்டஸ்லேடீஸ் கிட்ஸ் லஞ்ச்பாக்ஸ் 100 ரெசிபிகளில் ஒன்றாக இ புத்தகமாக வெளிவந்துள்ளது.

நிச்சயம் அனைவருக்கும் பயன்படும் என்பதில் சந்தேகமே இல்லை.மேலும் நிறைய குறிப்புகளை பார்க்க கீழ்கண்ட லிங்கினை க்ளிக் செய்யவும்.

Indusladies Kids Lunch Box Ideas 
Thursday 9 October 2014 | By: Menaga Sathia

தீபாவளி லேகியம் / DEEPVALI LEGIYAM | DEEPAWALI RECIPES

தீபாவளிக்கு நாம் நிறைய எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவதால் இந்த லேகியத்தை செய்து சாப்பிடுவது நல்லது.

இது கொஞ்சம் வேலை அதிகமாக இருந்தாலும் சுவை அலாதியாக இருக்கும்.என்னுடைய சமையல் புத்தகத்திலிருந்து பார்த்து செய்தது.

சாதரணமாக அஜீரண கோளாறு ஏற்படும் போதும் இந்த லேகியத்தை சாப்பிடலாம்.சிறிய குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவாங்க.

இதனை பிள்ளை பெற்றவர்கள் கூட 1 ஸ்பூன் சாப்பிடலாம்.

இந்த லேகியத்தை நான் ஸ்டிக் கடாயில் செய்வதை விட அலுமினியம் கடாய் அல்லது இரும்பு சட்டியில் செய்வது நல்லது.

என்னிடம் இருக்கும் பொருட்களை வைத்து செய்தது.

தே.பொருட்கள்

சுக்கு - 1 துண்டு
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
ஓமம் - 1/2 டீஸ்பூன்
ஏலக்காய் -4
கிராம்பு - 5
பட்டை - 1  துண்டு
கண்டதிப்பிலி - 4 குச்சிகள்
கசகசா -1/2 டீஸ்பூன்
இஞ்சி - 1 பெரிய துண்டு
ஆரஞ்சு ஜூஸ் -1/4 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
தேன் - 1 டேபிள்ஸ்பூன்
வெல்லம் -1/2 கப்
நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*சுக்கினை தட்டிக் கொள்ளவும்.

*சீரகம்+மிளகு+சோம்பு+ஓமம்+ஏலக்காய்+கிராம்பு+பட்டை+கசகசா+கண்டதிப்பிலி இவற்றை தனிதனியாக வெறும் கடாயில் வறுத்து  ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும்.

*பொடித்தவற்றை மாவு சல்லடையில் 2-3 முறை சலித்து மீண்டும் பொடிக்கவும்.

*பொடித்த பொடியை காற்றுபுகாத டப்பாவில் வைத்து வாசனை போகாமல் மூடி தேவையான போது பயன்படுத்தலாம்.

*இஞ்சியை அரிந்து 1/4 கப் அளவில் சாறு எடுக்கவும்.

*வாணலியில் இஞ்சி சாறு+ஆரஞ்சு ஜூஸ்+வெல்லம் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.

*தண்ணீர் ஊற்றக்கூடாது.

*வெல்லம் கரைந்த பின் வடிகட்டி மீண்டும் வாணலியில் ஊற்றி அடுப்பில் வைத்து 2 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

*பொடித்த பொடியை முழுவதுமாக தூவாமல் சிறிது சிறிதாக தூவி விடவும்.

*கொஞ்சம் தளர இருக்கும் போது பொடி தூவுவதை நிறுத்தி விடவும்.


*நெய்+நல்லெண்ணெய் சேர்த்து குறைந்த தீயில் சிறிது நேரம் கிளறவும்.

*கையால் தொட்டு பார்த்தால் ஒட்டிக் கொள்ளாமல் வரும் பதத்தில் அடுப்பிலிருந்து இறக்கி தேனை ஊற்றி கிளறவும்.
*நன்கு அறியதும் பாட்டிலில் எடுத்து வைக்கவும்.


பி.கு

*இதனை கொடுத்துள்ள அளவு படியே செய்தால் மிக சுவையாக இருக்கும்.

*பொடி மீதமிருந்தால் தேவையான போது கிளறிக் கொள்ளலாம்.

*கைபடாமல் வைத்திருந்தால் 1 மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
Saturday 4 October 2014 | By: Menaga Sathia

துளசி தீர்த்தம் (பெருமாள் கோவில் தீர்த்தம் /) THULASI THEERTHAM | PERUMAL KOVIL THEERTHAM

பெருமாள் கோவில் துளசி தீர்த்தம் பற்றி அனைவரும் அறிந்ததே.புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளுக்கு துளசி தீர்த்தம் செய்வது மிகச் சிறப்பு

தே.பொருட்கள்

நீர் - 1 கப்
ஏலககாய் -3
குங்குமப்பூ - சிறிது
பச்சை கற்பூரம் - 1 பின்ச்
துளசி இலைகள் - 2 அல்லது 3

செய்முறை

*ஏலக்காயை தட்டிக் கொள்ளவும்.மீதமுள்ள  அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து  1 மணிநேரம் வைத்திருந்து பூஜைக்கு பயன்படுத்தவும்.
 பி.கு

*பச்சை கற்பூரம் வாசனைக்காக சிறிதளவே சேர்க்கவும்.

*துளசி,குங்குமப்பூ மற்றும் ஏலக்காய் அனைத்தும் மருத்துவ குணம் வாய்ந்தது.அதனால் இந்த நீரை தினகும் குடிப்பது நல்லது.

இன்று புரட்டாசி 3 வது சனிக்கிழமையில் நான் பெருமாளுக்கு செய்த தளிகை

துளசி தீர்த்தம், ஜவ்வரிசி பாயாசம் ,மிளகு வடை ,  கறுப்புக் கடலை சுண்டல், மாவிளக்கு, கறிவேப்பிலை துவையல் ,  சர்க்கரை பொங்கல் ,தயிர் சாதம், எலுமிச்சை சாதம், புளிசாதம், தேங்காய் சாதம்,  உருளை வருவல் மற்றும் உப்பு சேர்க்காமல் பொங்கிய சாதம்+தயிர்+வெல்லம்( நடுவில் இருப்பது)

01 09 10