ரசவடை நாஞ்சில் நாட்டு சமையலில் மிக பிரபலமான ஒன்று.வடை செய்வதற்கு பட்டாணி பருப்பு தான் முக்கியம்.அது கிடைக்காத பட்சத்தில் கடலைப்பருப்பில் வடையை செய்யலாம்.
பட்டாணிபருப்பு ,இதை பற்றி முக்கியம் நான் சொல்லியே ஆகனும்,இதனை கடைகளில் பார்த்தாலும் ஏதோ தேவையில்லாத பருப்பு போல இதனை வாங்கவே மாட்டேன்.கடலைபருப்பு போல இல்லையே இது எதுக்குனு வாங்கமாட்டேன்.ஆனால் சாந்தி அக்காவின் பதிவை பார்த்ததும் அடக்கடவுளே !! இத்தனை நாளா இதனையா நாம வாங்காமல் விட்டோம்னு வருத்தம்...
ஆமாங்க,நான் தேவையில்லாத பருப்புனு எதை நினைத்தேனோ அதுதான் பட்டாணிபருப்பாம்,அப்புறமென்ன வாங்கி வந்து ரசவடையும் செய்து சாப்டாச்சு.கடலைபருப்பை விட பட்டாணிபருப்பின் விலை இங்க குறைவு தான்.வடையின் சுவையிலும் வித்தியாசம் தெரிகிறது.இனி கடலைபருப்புக்கு பைபை சொல்லவேண்டியது தான்.பட்டாணி பருப்பினை ஆங்கிலத்தில் Yellow Split Peas ,ப்ரெஞ்சில் POIS CASSES JAUNEஅழைக்கபடுகிறது.
இப்போ குறிப்புக்கு வருவோம்,ரசவடை செய்வதற்கு வடையை உருண்டையாகதான் போடுவாங்க.உளுந்து வடையில் செய்த ரசவடைலாம் ரசவடையே இல்லைன்னு நாஞ்சில் நாடு சாந்திஅக்கா சொல்லிட்டாங்க.அதனால் ரசவடை செய்தால் பருப்பு வடையினையே சேர்க்கவும்.அவங்க ரசவடை குறிப்பினை அவ்வளவு சுவையோடு எழுதியிருந்ததை படித்ததும் ஆர்வமாகி செய்தாச்சு.
அதேபோல் ரச செய்முறையும் கொஞ்சம் வித்தியாசம் உண்டு.
Recipe Source : Here
வடை செய்ய
பட்டாணி பருப்பு- 1 கப்
காய்ந்த மிளகாய்- 6
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்- 1/4 கப்
பொடியாக நறுக்கிய இஞ்சி- 1/2 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி- 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
உப்பு + எண்ணெய் -தேவைக்கு
செய்முறை
*பருப்பினை 1 மணிநேரம் ஊறவைத்து நீரை வடித்தபின் காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும்.
*சாதரணமாக வடைக்கு அரைப்பதுபோல் கொரகொரப்பாக அரைக்காமல் ரவை பதத்தில் அரைத்தெடுக்கவும்.
*அதனுடன் எண்ணெய் நீங்கலாக மேற்கூறிய பொருட்களை கலந்து சிறு உருண்டையாக பிடித்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
ரசம் செய்ய
இந்த ரசம் மசாலா செய்வதற்கு,அரைதெடுத்த மொத்த மசாலாவும் நெல்லிக்காயளவு மட்டுமே இருக்க வேண்டும்.
தே.பொருட்கள்
தக்காளி - 2
புளிகரைசல்- 2 கப்
நீர்- 1 கப்
உப்பு- தேவைக்கு
பெருங்காயப்பொடி- 1/4 டீஸ்பூன்
கடுகு -1/4 டீஸ்பூன்
எண்ணெய்- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து
நறுக்கிய கொத்தமல்லி -தேவைக்கு
மசாலா செய்ய
மிளகு -1/2 டீஸ்பூன்
சீரகம்- 1/2 டீஸ்பூன்
தனியா- 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 1
மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து
பூண்டுப்பல்- 10
செய்முறை
*மிளகு+சீரகம்+தனியா+காய்ந்த மிளகாய்+மஞ்சள்தூள் இவற்றை சற்றே கரகரப்பாக பொடித்த பின் கறிவேப்பிலை மற்றும் பூண்டினை சேர்த்து 1 சுற்று சுற்றி எடுக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளித்ததும் அரைத்த மசாலா மற்றும் பெரிய துண்டுகாளாகிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
*தக்காளியின் மேல்தோல் மட்டும் சற்று பிரிந்தாற்போல் வந்ததும் புளிகரைசல்+உப்பு+நீர் சேர்க்கவும்.
*ரசம் நுரைத்து வரும் போது பெருங்காப்பொடி+கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
ரசவடை செய்ய
*ரசத்தினை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில் ஆறிய வடைகளை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
*பின் அப்படியே 2மணிநேரம் ஊறவைத்தால் வடைகள் 2மடங்காக உப்பியிருக்கும்.
*லேசாக சூடுபடுத்தி ரசவடையினை சூடாக பரிமாறவும்.