Wednesday 5 July 2017 | By: Menaga Sathia

பருப்பு பொடி/ Paruppu Podi (Ambika Appalam Depot Style)

ஆந்திரா உணவில் எப்போழுதும் பருப்பு பொடி+நெய் கண்டிப்பாக இருக்கும்.திருப்பதிக்கு போனால்,ஓட்டல்களில் சாப்பிடும் போது இந்த காம்பினேஷனை ஒதுக்கிவிட்டு தான் சாப்பிடுவேன்,ஏன்னா எனக்கு பிடிக்காது.

அம்பிகா டெபோ பருப்பு பொடி ஒரு முறை கடையில் வாங்கினேன்,ஆனால் அப்போழுது வரை நான் பருப்பு பொடி சாதத்தில் சேர்த்து சாப்பிட்டதில்லை.அதனால் பொடியை இட்லிபொடியாக உபயோகித்துவந்தேன்.


ஒருமுறை சமைப்பதற்கு சோம்பேறியாக இருந்த போது இந்த பொடியை சாதத்தில் சிறிது நெய் சேர்த்து சாப்பிட்டதில் உண்மையில் அந்த சுவையில் மயங்கி தான் போனேன். இதுவரை வாழ்க்கையில் பருப்பு பொடியை தவறிட்டோம் என கூட வருந்தினேன்.

கூகிளில் தேடும்போது இந்த ரெசிபி கிடைத்தபோது,உடனே செய்தேன்.அதே சுவையில் இருந்தது.கூடுதலாக நான் கொஞ்சம் பெருங்காய கட்டி சேர்த்துக் கொண்டேன்.

இதில் விரும்பினால் கடுகு சிறிது மற்றும் கறிவேப்பிலை வறுத்து அரைக்கும் போது சேர்த்துக் கொள்ளலாம்,ஆனால் நான் சேர்க்கவில்லை.
 நான் எண்ணெயில் பொருட்களை வறுத்தும்,கலருக்கா 2 காஷ்மிர் மிளகாயும் சேர்த்துக் கொண்டேன்.

தே.பொருட்கள்
துவரம்பருப்பு - 1/2 கப்
பொட்டுக்கடலை -1/2 கப்
மிளகு+சீரகம் -தலா 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -10
காஷ்மிரி மிளகாய் -2
பெருங்காய கட்டி -1/2 டீஸ்பூன்
எண்ணெய் -1 டீஸ்பூன்
கல் உப்பு-தேவைக்கு

செய்முறை
*கடாயில் எண்ணெய் ஊற்றி பெருங்காயம் பொரித்து எடுத்த பின்,மிளகாய்களை வறுத்து எடுக்கவும்.

*அதே எண்ணெயில் துவரம் பருப்பு சேர்த்து பொன் முறுவலாக வறுத்தெடுக்கவும்.

*பின் மிளகு,சீரகம்,பொட்டுக்கடலையை வறுத்து ஆறவைக்கவும்.
 *அனைத்தும் நன்றாக ஆறியபின் மிளகாய்+உப்பு சேர்த்து முதலில் அரைக்கவும்.
*பின் மற்ற பொருட்களை சேர்த்து கொஞ்சம் கரகரப்பாக பொடித்து எடுக்கவும்.
*இந்த பொடியை சாதத்துடன் நெய் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும்.இட்லி,தோசைக்கு கூட சாப்பிட நன்றாக இருக்கும்.

பி.கு
*விரும்பினால் இதனுடன் பூண்டு சேர்த்தும் அரைக்கலாம்.

0 பேர் ருசி பார்த்தவர்கள்:

01 09 10